தமிழ் தாத்தா- கம்பராமாயணம்


தமிழ் தாத்தா என்று நாம் அன்போடு போற்றும் மகாமகோபாத்தயாய உ.வே.சாமிநாதையர் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் 

தமிழ் தாத்தாவும் கம்பராமாயணமும்.

மதிப்பிற்குரிய உ.வே.சா அவர்கள் அவருடைய ஆசிரியரான திரு.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் இருந்து கம்பராமாயணம் பாடம் கேட்டார் 

ஒரு தீபாவளி அன்று மாயூரம் (இன்றைய மாயவரம்) கடைவீதியில் ஓரிடத்தில் 
கம்பராமாயணம் ஏழு காண்டங்களும் ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார்.

அச்சமயத்தில் கம்பராமாயணம் பாடம் கேட்டு வந்தமையால்,அதுவரையில் இரவல் புத்தகங்களை படித்துவந்தமையாலும்.கம்பராமாயணப்  புத்தகங்களை வாங்கிவிடவேண்டும் என்று அவருக்கு ஆவல் உண்டானது.ஆனால் அவரிடம் புத்தகத்தை வாங்குவதற்குப்  போதிய பணமில்லை.

அப்போதைய அப்புத்தகத்தின் விலை ஏழு ரூபாய் (ஒரு பைசா கூடக்  குறைக்காத கடைக்காரர்).எப்படியாவது அதனை வாங்கிவிடவேண்டும் என்று உ.வே.சா அவர்களுக்கு ஆசை.

உடனே விரைந்து திருவாவடுதுறை வந்து தன் சிறியத்  தகப்பனாரிடம் விஷயத்தைச்  சொல்லி பணம் கேட்டார்.அப்பொழுது தான் அவருக்கு சம்பளம் வந்து இருந்தது.

சம்பளம் அதே "ஏழு ரூபாய்" 

விஷயத்தை அறிந்ததும்  தடையேதும் இன்றி ஏழு ருபையை உ.வே.சா விடம் கொடுத்துவிட்டார்.மறுபடியும் மாயூரம் விரைந்து கம்பராமாயணம் ஏழு காண்டங்களையும் வாங்கிவிட்டார்.

"புத்தகம் பெற்றதால் வந்த சந்தோஷம் பயணக்களைப்பை  களைப்பாக்கியது"  

அவ்வாறு பெற்ற கம்பராமாயணத்தை தன் ஆசிரியரிடத்தே காண்பித்து ஆசிபெற்றார்.

"நன்றாகப் படித்துப் புகழடைய வேண்டும்" என்று ஆசிவழங்கினார்.

இவ்வாறு கம்பராமாயணத்தை பாடங்கேட்டு உரை எழுதியுள்ளார் தமிழ் தாத்தா.

(மேற் கூறிய வரலாறு அவருடைய என் சரித்திரம் புத்தகத்தில் உள்ளது-அப்புத்தகத்தை பற்றிய என்னுடைய மற்றோரு வலைப்பூபதிவு புத்தகம் வாசகனை தேர்ந்தெடுக்கின்றது)

அது சில காலங்களாக பதிப்பில் இல்லாமல் இருந்தது,ஆனால் ஸ்ரீ ராமபிரான் கருணையால் 2022-ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.

மாறன் பதிப்பகத்தாரும், உ.வே.சா நூல் நிலையமும் பழைய புத்தகத்தை,மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

வருடா வருடம் நடக்கும் புத்தக கண்காட்சியில் நான் தவறாமல் உ.வே.சா நூல் நிலைய அரங்கத்திருக்கச் சென்று ஏதேனும் புத்தகத்தை வாங்குவது வழக்கம்.
கம்பராமாயணம் புத்தகத்தை காணும் போதெல்லாம் அவர் வாழ்க்கையில் நடந்த மேற்கூறிய நிகழ்வு என் நினைவிற்கு வரும்.

புத்தகத்தை எனது கரங்கள் தொடும் ஒவ்வொரு நேரமும்,இந்த வருடம் வாங்கிவிடலாமா என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கும்.அனைத்து பாகங்களையும் ஒரே சமயத்தில் வாங்கிவிடவேண்டும் என்று தீர்மானம்.புத்தகத்திற்கு ஏற்ற விலைதான்,ஆனால் தற்போது என்னால் வாங்க முடியவில்லை அப்புத்தகத்தை (ஸ்ரீ ராமனை)பார்த்து "வல்லமை தாராயோ" என்று வேண்டுதலோடும் ,விழி அகலா பார்வை புத்தகத்தின் மேலோடும் வருடங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.


மற்றொரு நிகழ்வு

ஒரு புத்தகக்கடைக்கு சென்றிருந்தேன்,திடீரென்று ஒரு நபர் "நீங்கள் கம்பராமாயணம் படித்துள்ளீர்களா ஏதேனும் உரையாசிரியர் புத்தகத்தை பரிந்துரைக்க முடியுமா என்று கேள்விகளை அடுக்கினார்.

தமிழகத்தில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு இன்னும் கம்பராமாயணத்தை சுவைக்கவில்லையே என்று வருத்தம்.

”கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?”-(திருவாய்மொழி-நம்மாழ்வார்)

நான் அவரிடம் ஐயா நான் பள்ளிக்கூடத்தில் கம்பராமாயணம் செய்யுள் பகுதியில் இடம்பெற்றதை தவிர வேறு செய்யுட்கள் படித்ததில்லை.ஆனால் தமிழ் தாத்தா அவர்களது உரை சிறப்பாக இருக்கும் என்று கூறி,உ.வே .சா அவர்களை பற்றி கூறினேன்.

புத்தகங்கள் கிடைக்கும் இடம் விவரங்கள் பற்றிய தகவல்களை கூறினேன்.

புத்தகத்தை வாங்கிய சந்தோஷம் அவரிடம் தகவலை பரிமாறியபொழுது ஆனால்,என்று? அப்புத்தகங்களை  வாசிக்க வரம் கிடைக்கும் என்று தெரியவில்லை.

"வல்லமை தாராயோ" என்ற வேண்டுதலுடன் வல்லமை பெறுவது திண்ணம் என்ற நம்பிக்கையுடன் (ஸ்ரீ ராமனின் மீது)



பா.ராமகிருஷ்ணன்
மார்கழி-26-ம் நாள்
10-01-2025 


Comments

Post a Comment

we invite your valuable comments