அன்பே சிவம்- பகுதி-1
அன்பே சிவம்
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"
என்று சேக்கிழார் பெருமானுக்கு அடியெடுத்துக்கொடுத்த,தாயிற் சிறந்த தயவான தத்துவனைப் (ரை) பற்றிய,அடியேனின் சிறு த்தொடர்ப் பதிவு
அன்பே சிவம்,
அன்புதான் சிவம் சிவம் தான் அன்பு.
ஒரு மகாசிவராத்திரி திருநாள்,நான் பிறந்த கிராமத்து கோவிலுக்கு சென்றேன்.
எம்பெருமான் சிவபெருமானுக்கு அபிஷேகமும் ஆராதனையும் மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.(தனக்கான பூஜையை அவர் சிறப்பாக நடத்திக்கொண்டார் என்று தான் கூற வேண்டும்)
"அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்ற மாணிக்கவாசகரின் வாசகமும் அதுவன்றோ!
என் ஊருக்கு செல்வோம்
குறிப்பாக நடராஜர் சந்நிதிக்கு
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே
(திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்)
தில்லை ஆனந்த கூத்தனை (ஸ்ரீ நடராஜ மூர்த்தியை) பார்த்தாலோ ,அவரை நினைத்தாலோ,மனம் ஆனந்த கூத்தாடுகிறது.
நடராஜரை ஆராதிக்கும் அர்ச்சகர் (முதியவர்),வேதத்திலும் ஆகாமத்திலும் வழிகாட்டிய முறைப்படி சிவனை வழிபட்டார்,வழிபடவும் வைத்தார்.
அதன் பிறகு அர்ச்சகர் செய்த செயல் மெய் சிலிர்க்க செய்தது.
நடராஜ மூர்த்தியின் குஞ்சிதபாதத்தை (தூக்கிய திருவடி) பிடித்துவிட்டார்,(கால்கள் வலியெடுத்தவர்க்கு செய்யும் பணிவிடை)
["குஞ்சிதபாதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு; தில்லைக் கூத்தப்பிரானின் வளைந்த தூக்கிய திருவடி. தூக்கிய திருவடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர். மற்றொரு பொருள் சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் மூலிகை வட்டமாகும். இது நடராஜர் காலை அலங்ரிக்கும்; வெட்டிவேர் மற்றும் மூலிகைப் பொருளைக் கொண்டு வட்டமாகத் தயாரித்து இருப்பர்"]
(ஒரு சேவகன் எஜமானருக்கு பணிசெய்வது போல,ஒரு மகன் தந்தைக்கு செய்வதை போல)
எம்பெருமானுக்கு கால்கள் வலிக்குமா என்று என்னும் சிலரின் கேள்விக்கு பதில் தேடும் விதமாக,பதிலை உலகறிய செய்யும் விதமாக
அர்ச்சகரின் பேரன் ஞானசம்பந்தன்
"தாத்தா நடராஜருக்கு கால் பிடித்து விட்டிங்களே,அவருக்கு கால் வலிக்குமா?" என்று கேட்டான் தன் மழலை குரலால்".
"இல்லை அப்பா,உலகில் உள்ளோர் அனைவரும் உறங்கும் போதும் உறங்காமல் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக ஆனந்த நடனமாடிக் கொண்டே உலகை காக்கும் அவரின் திருவடி வலிக்குமோ என்று அவரின் மீது கொண்ட அன்பினால் நான் செய்யும் பணிவிடையப்பா அது"
பேரனும் தன் பங்கிற்கு நடராஜருக்கு அதே போல் செய்தான்,தாத்தாவின் கண்களில் அன்பின் வெளிப்பாடாக கண்ணீர் பெருகியது.
என்னே அவர்கள் பெற்ற பாக்கியம் என்று நடராஜ மூர்த்தியை வணங்கினேன்.
சட்டென்று அருகே வந்தார் விருபாக்ஷர் [விருபாக்ஷர் யார் என்று அறியாதவர்களுக்கு (யார் விருபாக்ஷர்?) ]
உனக்கு ராஜசேகர பாண்டியனின் வரலாறு தெரியுமா என்று கேட்டார்?
நீங்கள் கூறக்கேட்டதில்லை என்றேன் புன்னகையுடன்.
நீ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொக்கநாதர் சந்நிதிக்கு சென்று தரிசித்திருக்கிறாயா?
ஆம்.
"அங்கே உள்ள சிறப்பு?"-விருபாக்ஷர்
வெள்ளியம்பல நடராஜர் பெருமான்.
மதுரையை ஆண்ட ராஜசேகர பாண்டியன் ஆயக்கலைகள் 63-யும் கற்று தேர்ந்தான்.
64-கலைகளுள் ஒன்றான பாரதக்கலையைமட்டும் கற்கவில்லை,காரணம் நாட்டிய கலைக்கு தலைவராக நடராஜ மூர்த்தி ஆடும் இந்த மண்ணில் அவருக்கு சமமாக தான் ஆடலாமா என்ற பக்தி.
இறைவனின் திருவிளையாடலை யார் அறிவார்?
சபாபதியின் (நடராஜரின் மற்றோரு திருநாமம்) திருவருளோடும் (திருவிளையாடலினால்) அனுமதியோடும் அந்தக்கலையையும் கற்றான்.
நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கும் சமயம் மனதில் ஒரு எண்ணம்
சில நாட்களாக நாட்டியம் கற்று ஆடிக்கொண்டிருக்கும் நமக்கு இப்படி கால்கள் வலிக்கிறதே,எம்பெருமான் இடைவிடாமல் ஆடுகிறார்,அதிலும் இடது காலை தூக்கிக்கொண்டு எத்தனை எத்தனை யுகங்களாக நிற்கிறாரே,அவர் கால் மாறி ஆடினால் சற்று வலி குறையுமே என்று சிந்தித்தான்.
ஈசனிடமே இதை கூறிவிடலாமே என்று புறப்பட்டார்.
அப்பா சபாபதியே! கொஞ்ச காலம் நாட்டியம் ஆடும் எனக்கு இப்படி கால்கள் வலிக்கிறதே,உன் கால்கள் எப்படி வலிக்கும்,சற்று கால் மாற்றி ஆடக்கூடாதா? என்றான்.
நடராஜர் எதுவும் பதில் கூறவில்லை
மன்னன் ராஜசேகரன் விடுவதாகயில்லை,"அய்யனே நீங்கள் கால் மாற்றி ஆடாவிட்டால் இக்கணமே என் உயிரை மாய்த்துக்கொள்வேன்" என்று உடைவாளை எடுத்தான்.
மன்னனின் வேண்டுக்கோளுக்கு இணங்க இன்றும் அவ்வாரே அருள்கிறார்.
இதிலிருந்து நீ அறிந்தது என்ன என்று கேட்டார்,விருபாக்ஷர்.
கண்களில் நீர் ததும்ப,வார்த்தை வெளி வந்தது :"அன்பே சிவம்"
திரை விலகி முதல் கால பூஜையின் தீப ஆராதனையை ரசித்தோம்.
நீங்கள் கபாலீஸ்வரர் கோவிலுக்கு செல்வதாக கூறினீரே,அங்கு செல்ல வில்லையா?
விருபாக்ஷர் "அது மற்றோரு கதை"
(அதை அடுத்த பகுதியில் கூறுகிறேன்)
26-02-2025
குரோதி வருடம் மாசி 14-ம் நாள்
மகாசிவராத்திரி
-விருபாக்ஷருடன் ராமகிருஷ்ணன்
😊 Nice one on sivarathri. NAMASIVAYAM
ReplyDelete